Sunday 30 June 2013

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம்: துபாயில் முதலில் அறிமுகம்


வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் உலகி்ல் முதன் முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட உள்ளதாக அமீரகத்திற்கான இந்திய தூதர் எம்.கே.லோகேஷ் அவர்கள் அமீரக மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் வி.களத்தூர் கமால் பாஷாவிடம் தெரிவித்தார்.

அபுதாபி இந்திய தூதரகத்தில் புதிய தலைமுறை அமீரகச் செய்தியாளர் கமால் பாஷாவிற்கு அளித்த பிரத்தியேக பேட்டியின்போது அமீரகத்தில் துவக்கப்படவுள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் பற்றி விளக்கினார். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, அவர்களது பணி சார்ந்த ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.‌ இந்நிலையில், இதுபோன்ற பணிகளுக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் நிலையும் இதே தான்.

இதை மாற்ற நினைக்கும் மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்நிதயர்களுக்கான துறை இத்தரப்பினருக்காக ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பலன்கள் கொண்ட சிறப்புத் திட்டத்தைத் தொடங்கவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த திட்டம் முன்மாதிரியாக தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. எனவே விரைவில் இத்திட்டத்தை நாங்கள் அமல்படுத்தவிருக்கிறோம் என எம்.கே. லோகேஷ் கூறினார். கடைநிலை ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டம்: மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் சாதாரண தொழிலாளர்களாகவே வேலை செய்து வருகின்றனர். இதுபோன்ற தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, காப்பீடு, ஓய்வூதியம் இல்லாத நிலையில் அதுபோன்றவற்றை செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இத்திட்டத்தில் சேர்ந்து ஆண்டுக்கு 5,000 ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தும் ஆண்களுக்கு 2,000 ரூபாயையும், பெண்களுக்கு 3,000 ரூபாயையும் இந்திய அரசு அவர்களது கணக்கில் 5 ஆண்டுகளுக்கு செலுத்தி வரும். 5 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்புவோருக்கு ஆயுள் காப்பீடு, மறுவாழ்வு உதவித் தொகை, ஓய்வூதியம் ஆகிய மூன்று வகையான பலன்கள் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பணி செய்து தாயகம் திரும்பும் கடை நிலை ஊழியர்களுக்கு (வகுப்பிற்கு கீழ் படித்திருக்கிற இ பாஸ்போர்டில் இசிஆர்(Emigration Check Required)முத்திரையுள்ளவர்களுக்கு)பலனளிக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக எம்.கே.லோகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் லோகேஷ் இந்தியர்களை கேட்டுக் கொண்டுள்ளார் இந்தியர்கள் வரவேற்பு: இந்த சிறப்புத் திட்டத்துக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் மிகுந்த வரவேற்பை தெரிவித்துள்னர்.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir