Tuesday 18 June 2013

தேசிய அடையாள அட்டை



நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கனவே குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி கணக்கு அட்டை என நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் இருந்தாலும் அவை ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணமாக இல்லை. அதிலும் குடும்ப அட்டை போன்றவற்றை பலர் சொந்த ஊரில் ஒன்று, பிழைக்கும் ஊரில் ஒன்று என்று வைத்திருக்கிறார்கள்.

அதிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிமுகமான பிறகு வெளியூரில் உள்ள சொந்தக்காரர்களுக்கு எல்லாம் குடும்ப அட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.  இது போன்ற காரணங்களால் அரசின் திட்டங்களை சிலர் மட்டுமே பலமுறை அனுபவிக்கும் நிலைமை நீடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊரின், நாட்டின் உண்மையான மக்கள் தொகை கணக்கு தெரியாத நிலை. இதற்கெல்லாம் மாற்றாகத் தான் இந்த தேசிய அடையாள அட்டை இருக்கும்.

ஏனெனில் தேசிய அடையாள அட்டையில் வெறும், பெயர், முகவரி, புகைப்படும் மட்டுமின்றி அடையாள அட்டைக்கு உரியவரின் கை விரல்களின் ரேகை, கருவிழி ஆகியவை பதியப்படும். இதன் மூலம் ஒரே ஆள் பல அட்டைகள் பெறுவது முற்றிலுமாக தடுக்கப்படும். இந்த அட்டையை வழங்க இந்திய தேசிய ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த நந்தன் நீல்கனி என்பவர் இந்த ஆணையத்தின் தலைவராக இருக்கிறார்.

முதன்மை அட்டை:

நாடு முழுவதும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு அரசின் உதவிகள், சலுகைகள் பெற  விண்ணப்பிக்க இதுவே முதன்மையான அடையாள அட்டையாக இருக்கும். சமையல் எரியவாயு இணைப்பு பெற, வங்கி கணக்கு தொடங்க, தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை பெற, பள்ளி கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, குடும்ப அட்டை பெற அனைத்துக்கும் இதவே முதன்மையான தேவையாக இருக்கும். அது மட்டுமின்றி அடிக்கடி வீடு மாறும் போது குடும்ப அட்டை, எரிவாயு இணைப்புகளை எளிதில் மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும் என்கிறார்கள்.

அடையாள அட்டையில் என்ன இருக்கும் ?

தேசிய அடையாள அட்டையின் மேல் புறத்தில் உள்ள புகைப்படம், பெயர், 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் மட்டுமின்றி உள்ளே சிப் ஒன்று இருக்கும். அது 2 பகுதிகளை கொண்டதாக இருக்கும். ஒன்றில் கைரேகைப்பதிவுகள், கருவிழிப்பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருக்கும். மாற்ற முடியாது. இன்னொரு பகுதியில் முகவரி, பணி, கல்வித்தகுதி வங்கி கணக்கு எண் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதனை வேண்டும்போது மாற்றிக் கொள்ளலாம். வங்கி கடன், கையிருப்பு அட்டை போன்று கையளவு அட்டையாக இருக்கும்.

ஆதார் அட்டை எதற்கெல்லாம் தேவை? எப்படி பெறலாம்?

டெல்லி: கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது. கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது.



ஆதார் அட்டை பெறுவது எப்படி?

1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

2. ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பிக்கவும்.

3. ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

4. புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

5. ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

6. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

7. பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும்.

 8. ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண் தான் வழங்கப்படும்.

9. நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

10. ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.

11. ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை.

12. ஆதார் கடிதங்களை உரியவிரடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.

மேலும் விபரங்களுக்கு http://uidai.gov.in/ என்ற இணைய தள முகவரியை பார்வையிடலாம்.

மேலும் ஆதார் ஹெல்ப் லைன் தொலை பேசி எண்: டோல் ஃப்ரீ எண் : 1800-180-1947

இதுகுறித்துஇ மேலும் விவரங்களை அறிய 044-28582798, 0431-241245, 0452-2526398, 0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir