Wednesday 21 August 2013

இந்தியரை காப்பாற்றிய சவூதி மன்னர்!!!



சாலை விபத்தொன்றில் 9 நபர்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் வாடிய இந்தியர் ஒருவருக்காக சவூதி மன்னரே முன் வந்து சுமார் 6,53,000 சவூதி ரியால்கள் குருதிப்பணம் செலுத்தியதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சலீம் பாஷா சவுதியில் கமீஸ் முசைக் எனும் நகருக்கு கடந்த 2004ஆம் ஆண்டு ஓட்டுநர் பணிக்கு வந்தார்.
கட்டுமான கற்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணி செய்த அவருடைய வாழ்வில் அந்த விபத்து ஒரு திருப்பு முனையானது.

டிராக்டர் ட்ரெய்லர் ஓட்டிய பாஷா, நெடுஞ்சாலையில் மினி வேன் ஒன்றுடன் பிப் 11, 2006 அன்று மோதியதில் எட்டு சவூதி பெண் ஆசிரியைகளும், ஒரு எகிப்திய வாகன ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாஷா மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டு பாஷா சிறை வைக்கப்பட்டார்.
திட்டமிடாமல் விபத்தாக நிகழ்ந்த மரணங்கள் என்பதால் குருதிப் பணம் கொடுத்தால் பாஷா விடுதலை செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
மாதச் சம்பளம் சவூதி ரியால்கள் 1,200 மட்டுமே பெற இந்தியாவிலிருந்து கடல் கடந்த பாஷாவுக்கு இது மிகவும் மாபெரும் தொகை.
என்ன செய்வது

பாஷாவுக்கு யார் உதவ முன் வருவர் என்று காலம் கழிந்து வந்த நிலையில் எதிர்பாரா திருப்பமாக சவூதி மன்னர் அப்துல்லாஹ்வே அந்தக் குருதிப் பணம் 6,53,000 ரியால்களையும் செலுத்தி பாஷா விடுதலை ஆக வழி கோலியுள்ளார்.
6,53,000 ரியால் என்பது இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு கோடிக்கும் மேலாகும்.

பாஷாவின் விடுதலைக்கு முயற்சி செய்த சக இந்தியரான சமூக சேவகர் அஷ்ரஃப் குட்டிச்செல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
விடுதலை அடைந்த பாஷா கண்ணில் நீர் மல்க தனது விடுதலைக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதுடன், உடனடியாக மக்கா சென்று உம்ராஹ் என்னும் புனிதக் கடமையை நிறைவேற்றி தனது விடுதலைக்கு உதவிய மன்னருக்காகப் பிரார்த்தித்துக் கொண்டுள்ளார்.
விபத்து நடந்தால் தப்பி ஓடாமலும், உண்மையை ஒப்புக்கொள்வதும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டாமலிருப்பதும் குருதிப் பணம் தந்து விடுதலைப்பெற வழி வகுக்கும் என்றார் சலீம் பாஷா.

நன்றி. kadayanallur.org

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir