Monday, 28 October 2013

"மோட்டு தெரிஞ்சா, உடனே கிளம்பி வீட்டிற்கு வந்து விடு" !!!


மந்தியூர் எனும் கிராமத்தில் ஒரு அம்மா தன் பிள்ளையை மிகவும் பாசமாகவும், கண்டிப்பாகவும் வளர்த்து வந்தாள். அவன் நன்றாக படித்து கல்யாண வயதை அடைந்த உடன் அவனுடைய அம்மா அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள். அவன் கல்யாணம் ஆன பின்னும் தன்னுடைய அம்மா சொல்லை மதித்து அதன் படி நடந்து வந்தான். சில காலம் சென்றது, அவன் அம்மாவிடம் சென்று "நான் விருந்துக்கு மாமியார் வீட்டிற்கு போய் வருகிறேன்" என்றான். அதற்க்கு அவனுடைய அம்மா "போய் வா மகனே, "மோட்டு" தெரிஞ்சா உடனே கிளம்பி வந்து விடு" என சொன்னாள். அவனுக்கு புரியவில்லை. இருந்தாலும் "சரி" எனக்கூறிக்கொண்டு விருந்துக்கு சென்றான்.

அங்கு அவனுக்கு நல்ல உபசரிப்பு. முதல் நாள் ஆட்டுக்கறிகுழம்பு, மறுநாள் கோழிக்கறி, மூன்றாம் நாள் மீன் கறி குழம்பு ...என  சென்றது. அந்த நேரம் வயல் அறுவடை காலம் எனவே அனைவரும் வயல் அறுவடைக்கு மும்முரமாக இருந்தனர். மாமியார் வீட்டிலும்  அனைவரும் வயலுக்கு சென்றதால் மனைவி மட்டுமே இருந்தாள். மதிய நேரம்...  மனைவி தன்னுடைய கணவனை சாப்பிட அழைத்தாள், கணவனும் வந்து உட்கார்ந்தான் மனைவி மெதுவாக கணவனிடம் சென்று " இன்றைக்கு அறுவடை என்பதால் அனைவரும் வயலுக்கு சென்று விட்டனர் எனவே சமைக்க நேரம் இல்லை இன்னைக்கு மட்டும் பழைய சோறு கஞ்சி சாப்பிடுறிங்களா?" என கேட்டாள். அதற்க்கு அவன் பரவாயில்லை கொண்டுவா" என கூறினான். அந்த காலத்தில் பெரும்பாலான வீடுகள் மோட்டு வீடுகளாக (முக்கோண வடிவில்) தான் இருக்கும். இவன் பெரிய கிண்ணத்தில் இருந்த அந்த பழைய சோறு கஞ்சியை சாப்பிட தயாரானான் அப்பொழுது அந்த கஞ்சியில் உற்றுப்பார்த்தான் அதில் , அந்த வீட்டின் மேலுள்ள மோட்டு தெரிந்தது. இப்பொழுது அவனுடைய அம்மா சொன்ன வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. பொறுமையாக சாபிட்டான். பின்னர் மாலைபொழுது ஆனதும் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு தான்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்து விட்டான்.

இத தான்.. கிராமங்களில் சொல்லுவார்கள் .. "விருந்தும், மருந்தும் மூன்று நாள்" என.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir